Monday, October 15, 2007

நான் ஒரு முட்டாளுங்க !

நம் நாட்டின் பிரதமர் யார் ?
மன் மோகன் சிங்,
மாடிவீட்டு குப்புசாமி,
அடுத்தாத்து அம்புஜம்

இதற்கு விடை தெரிந்தால் மேற்கொண்டு கீழே படிக்கலாம்...


டிவி சேனல்களில் ரியாலட்டி நிகழ்ச்சிகளில் நேயர்களுக்கு கேள்விகளை கேட்டு, உங்களுக்கு சரியான விடை தெரிந்தால் எங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள் என்று அறிவிப்பார்கள்.

உதாரணத்திற்கு கேள்வி இப்படி இருக்கும்

நம் நாட்டின் பிரதமர் யார் ?
மன் மோகன் சிங்,
மாடிவீட்டு குப்புசாமி,
அடுத்தாத்து அம்புஜம்

இதில் எந்த விடையை அனுப்பினாலும் அந்த சேனலுக்கு லாபம் தான். ஒரு கிராம் தங்கத்திற்கோ, அல்லது ஒரு கிலோ வெங்காயத்திற்கோ ஆசைபட்டு நம்ம மக்கள் உடனே எஸ்எம்எஸ் அனுப்பிவிடுவார்கள்.

சன் மியூசிக் சேனலில் பார்த்தால் "நான் ஒரு முட்டாளுங்க" பாடல் ஓடிக்கொண்டிருக்கும், கீழே "பாமா ஐ லவ் யூ, "சீவாஜி தாண்டா பாஸ்" போன்ற அறிய தகவல்கள் நிறைந்த எஸ்எம்எஸ்-க்களை பார்த்தால் நாட்டில் எவ்வளவு பேர் வேலையுடன் இருக்கிறார்கள் என்பது புரியும்.

ஜோடி நம்பர் 1, சன் டிவி தங்க வேட்டை, குரேர்பதி நிகழ்ச்சி, மதன்'ஸ் திரைபார்வை, கலக்க போவது யாரு?, என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த கூத்து இருக்கிறது.

இந்த மாதிரி அனுப்பும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உங்களிடம் வசூலிக்கபடுகிறது.

சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் பதிவான வாக்குகள் 1.5 லட்சம். ஒரு வாக்குக்கு 4 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் இதில் கிடைத்த வருவாய் 6 லட்சம்.

இந்த பச்சா நிகழ்ச்சிக்கே இவ்வளவு என்றால் அமிதாபச்சன் நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரும் ? 50 மில்லியன் எஸ்எம்எஸ்க்கு மேல் என்கிறது தகவல் !

ஸீ தொலைக்காட்சி நிறுவனம் ஒரு மாதத்தில் 10 முதல் 50 மில்லியன் எஸ்எம்எஸ்-களை பெறுகிறது. ஸ்டார் டிவிக்கு மாதம் ஒன்றுக்கு 5 முதல் 15 மில்லியன் எஸ்எம்எஸ்-கள் வந்து குவிகிறது. சோனி தொலைக்காட்சியின் இந்தியன் ஐடல் நிகழ்ச்சிக்கு மட்டும் 10 கோடி எஸ்எம்எஸ்-கள் குவிந்துள்ளன.

தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்து குவியும் எஸ்எம்எஸ்-கள் ஏராளம். அனைத்தையும் சரிபார்த்து முடிவுகளை வெளியிடுவது எவ்வாறு நடைபெறுகிறது என்பது முக்கியமான ஒன்று. குவியும் எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யமானது.

இதற்கென்றே தொலைக்காட்சி சானல்கள் தகவல் தொழில்நுட்ப குழு ஒன்றை நியமித்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த குழுவினருக்கு அனைத்து எஸ்எம்எஸ்-களையும் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட 10 அல்லது 20 நிமிடங்களே உள்ளது. இதற்கு ஸீ தொலைக்காட்சி தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை முதலீடு செய்திருக்கிறது.

செல்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த எஸ்எம்எஸ்-களை நிர்வாகம் செய்யும் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனால் உருவாகும் மொத்த வருவாயில் 70 சதவீதம் தொலைபேசித் துறைக்கு செல்கிறது. 30 சதவீதம் மட்டுமே தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கிறது. 30 சதவீத லாபத்திற்கு இவ்வளவு முதலீடுகள் செய்யப்படுகிறது என்றால், இதன் மூலம் வரும் மொத்த வருவாயை யோசித்துப் பாருங்கள். அந்நியனில் வரும் ஐந்து பைசா உதாரணம் ஞாபகத்துக்கு வரும்

1 Comment:

Venkatramanan said...

இன்னொன்றும் கேள்விப்பட்டேன் (http://ecophilo.blogspot.com/)
இவ்வாறு பெறப்படும் அலைபேசி எண்கள் அற்புதமாய் Tele-marketing வகையறாக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாய்! மொத்தத்தில் "வாயுள்ள் புள்ள பிழைக்கும்!"

அன்புடன்
வெங்கட்ரமணன்