Wednesday, April 25, 2007

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில்,

சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது.

இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப் பெரிதாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது கிளீஸ் 581 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது.

இந்தப் புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாக கணித்துள்ளோம். அதேபோல உயிரினங்கள் வசிக்க் கூடிய தட்பவெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த கிரகத்தில் பூஜ்யம் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பம் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், திரவ நிலையில் இங்கு இருக்கலாம்.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே வாயுக்களால் நிரம்பியவை. ஆனால் இந்தப் புதிய கிரகம் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக நினைக்கிறோம்.


இந்த கிரகத்தின் சுற்று வட்டம் பூமியின் சுற்று வட்டத்தை விட 1.5 மடங்கு அதிகம். இந்த கிரகத்தில் பல கடல்களும் இருக்கக் கூடும். பூமியைப் போலவே இது இருப்பதால் இந்தக் கிரகம் குறித்த ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல அரிய தகவல்களும், ஆச்சரிய தகவல்களும் நமக்குக் கிடைக்கக் கூடும்.

இந்தப் புதிய கிரகம் பூமியிலிருந்து 125 டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றார் உத்ரி.

சிலியில் உள்ள லா சில்லா நகரில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Read More...

Thursday, April 12, 2007

காடுகள் அழிப்பால் சமூகக் குழப்பம் ஏற்படுவதாக கிரீன்பீஸ் எச்சரிக்கை

BBC: ஆப்ரிக்க கண்டத்திலுள்ள காங்கோ மக்கள் குடியரசில் இருக்கும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மழைக்காடுகளை சர்வதேச அளவில் மரம் வெட்டும் குழுக்கள் வெட்டுவதன் மூலம் பெருமளவில் சமுதாய குழப்பங்களை விளைவித்து, சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் எனும் அமைப்பு கூறியுள்ளது.

2002 ஆம் ஆண்டில் அங்கு புதிதாக மேலும் மரங்களை வீழ்த்த தடைவிதிக்கப்பட்ட பிறகு மட்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் பரப்பளவை விட பெரிய அளவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அங்குள்ள மழைக்காடுகளின் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பதன் மூலம் தங்களது ஏழ்மைநிலை மேம்படும் என உள்ளூர் சமூகத்தினர் ஒரு மாயவலையில் சிக்க வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ள கிரீன்பீஸ் அமைப்பு அங்கு பல ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள காடுகளை சில நூறு டாலர்களே பெறுமான பரிசுப் பொருட்களை கொடுத்து மககள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது..

Read More...

Wednesday, April 11, 2007

துப்பு: வலையில் வாழ டிப்ஸ்

இணையத்தைத் திற்மபட பயன்படுத்த சில ஆலோசனைகள்.

1. Google Guide Quick Reference: Google Advanced Operators (Cheat Sheet): அச்செடுத்து கணினிப் பக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். கூகிள் தேடல்களில் நிச்சயம் உதவும். கூகிளுக்கு கோனார் கையேடு.


2. The 10 Largest Social Driven Sites: இணையமே கூட்டுறவுகளால் ஆனது. புகழ்பெற்ற கூட்டுப்புழுக்களைப் பட்டியலிடுகிறார். தினசரி எல்லாவற்றையும் அரகராப் போட்டுக் கொள்ளவும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ;)

3. 'Getting Things Done' In 60 Seconds: ஒரு நாளில் 48 மணி நேரம் வேண்டுமா? கொடுத்த வேலையை சொன்ன நேரத்துக்குள் கவனம் சிதறாமல் இண்டு இடுக்குகளைத் தவறவிடாமல் முடிக்க வேண்டுமா?

4. Writing Apps for Bloggers - lifehack.org: இன்னும் மைக்ரோசாஃப்ட் வோர்ட் பயன்படுத்துகிறீர்களா? கூகிள் டாகுமெண்ட்சுக்கும் மாற்று வேண்டும் என்கிறீர்களா?

5. How Do You Scale a Tag Cloud?: என்னுடைய வோர்ட்பிரெஸ் தமிழ் செய்தித்தளத்தில் (Tamil News) இன்றைய சுபயோக தினத்தில் 8,318 குறிச்சொற்கள் இருக்கிறது. இம்புட்டையும் சிறப்பாக வாசகருக்கு எப்படி காட்டுவது? எவ்வாறு மேய்ப்பது?

6. Five Ways to Mark Up the Web: கூகிள் நோட்புக் கொண்டு சொந்தக் குறிப்புகளைத் தொகுக்கலாம். டெல்.இசி.யஸ் கொண்டு புத்தகக்குறியிடலாம். இவையிரண்டும் ஒரே இடத்தில் கிடைத்து, அப்படியே பிடித்த மேற்கோள்களைக் கரையிட்டு, அடித்து திருத்தி சேமிக்க வேண்டுமா?

7. 15 video search lessons from the Search Engine Stategies conference: Google watch: வீடியோ எடுக்கும் வேலையா? விழியம் மூலம் திறம்பட காரியத்தை சாதித்து விற்க வேண்டியதை வாங்க வைக்க வலியுறுத்த வேண்டுமா?

8. O'Reilly Radar > Draft Blogger's Code of Conduct: பழகத் தெரிய வேணும்... வலையில் பார்த்து நடக்க வேணும்... பதிவரே! பேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாக...

9. Mashups for the rest of us - Freshblog: தமிழ்மணம், தேன்கூடு போன்று நீங்களும் வலையகம் தயாரிக்க வேண்டுமா? தமிழ் வீடியோ, ஃப்ளிக்கர் படங்கள், மகளிர் சக்தி என்று சகலமும் கலந்து மிக்சர் போட ரெடியா?

10. QOTD : Scobleized - “semantic” Web: எழுதியதை அப்படியே புரிந்து கொள்வதற்கு பதிலாக, காலத்துக்குத் தக்கவாறு, வினாவிற்கேற்ற விடையாக, ஜெஜெ x கேகே அரசுக்கு ஏற்றவாறு பொருத்தமாக மாற்றுவது எப்படி? இணையத்தின் அடுத்த கட்டம்.


சொல்லி மாளாது... இந்தப் பதிவு பிடித்திருந்தால், Logic+Emotion: MVB + MSM சொல்லும் இடங்களையும் சென்று விடாமல் படித்து வரவும்.


கொசுறு. OpenYou: The Limits of Privacy on the Social Web: இத்தனையும் இருந்தும் ஆய பயன் என்ன என்பதை சுருங்க சொல்லும் டக்கர் மேட்டர். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

Read More...

வம்பு: தமிழ்ப்பதிவுகள் == வருங்கால ட்விட்டர்?



கார்ட்டூன்: sarahL: You Know, For Twits

தமிழ்மணம்/தேன்கூடு ட்விட்டராக மாறிவிடுமா என்று ஆராய, அறிய: Micro-bloggers of the world keep it short

Read More...

பதிவுகள்: அறிவியல் & நுட்பம்

தமிழ் ரோபோ - Tamil Robo: பதிவுகள்: தமிழ்மணத்தில் இன்றுவின் தொடர்ச்சி

1. nadaipaadhai-sidewalk: இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்! -

ஏப்ரல் மாத டைம் பத்திரிகையில் க்லோபல் வார்மிங்கை (Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.



2. தீபா:

3. தமிழ்பித்தன்: குரல் வழிப் பின்னூட்டங்கள் | (2) | (3)

4. விக்கி பசங்க: Fits, Seizures and Epilepsy

5. பிருந்தனின் வலைப்பூ: மூன்று சக்கரங்களுடன் பறக்கும் மகிழுந்து உலகின் முன் வருகிறது!!!

6. 'உள்ளும் புறமும்' வெங்கட்: சூரியக் குடும்பம் - பெரியதும் சிறியதும் -
மிக அற்புதமான படம் இது. சூரியக் குடும்பத்தில் 200 மைல் விட்டத்திற்கு மேற்பட்ட எல்லா கோள்கள், உபகோள்கள் இன்னபிறவற்றை அவற்றின் படங்களைக் கொண்டு அளவு வரிசைப்படி தொகுத்திருக்கிறார்கள்.


7. சுந்தரவடிவேல்: மகளிர் சக்தி! -
அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி முடிவொன்றில் பெண் செல்களுக்கு அதிகமான தகைவுதாங்கு திறன் இருப்பதாகவும் அதனாலேயே அந்த செல்களுக்கு மீளுருவாக்க (regenerative) திறன் ஆண் செல்களைவிட அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது. கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்போம்.


8. வி. ஜெ. சந்திரன் - விரியும் சிறகுகள்: Listeria monocytogenes - ஒரு அறிமுகம் -
உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது பொதுவாக சுக தேகிகளை பாதிப்பதில்லை.


9. வி. ஜெ. சந்திரன் - விரியும் சிறகுகள்: Hamburger - பிரியர்களுக்கு -
Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்.

Read More...

Tuesday, April 10, 2007

இல்லம்: குழந்தை வளர்ப்பு

காப்பகங்களில் நாளைக் கழிக்கும் சிறுவர்கள் சமூக விரோதிகளாக மாறும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பெற்றோரால் கவனிக்கப்படாமல் நர்சரிகளில் காலந்தள்ளும் குழந்தைகள் மன சஞ்சலத்துடனும் தடுமாற்றத்துடனும் இருந்தாலும் துணிவுடன் அச்சமின்றி விளங்குகிறார்கள்.

வாரத்திற்கு ஓரிரு நாள் பிறர் பராமரிப்பில் இருப்பவர்களை விட மூன்று நாள் இருப்பவர்கள் சமூகத்திற்கு மேலும் பாதகம் விளைவிக்கும் செய்கைகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.

BBC NEWS | UK | Education | Nursery link to poor behaviour

Read More...

உடல்நலம்: காய்கறி + பழம் ≠ ஒவ்வாமை

அமெரிக்காவில் இது ஒவ்வாமைக் காலம். மகரந்தங்கள் மணம் வீசுவதால் அலர்ஜி வந்து 'ஆச்சூ' தும்மும் நேரம்.

காய் கனிகள் நிறைந்த மத்தியதரை உணவை உண்டால் இந்த வகை ஆஸ்துமாவில் இருந்து மீளலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி, திராட்சை ஆகியவற்றை சாப்பிடவும்; பூப்பூக்கும் காலத்தை வரவேற்கவும்!

BBC NEWS | Health | Med diet 'could prevent asthma'

Read More...

Sunday, April 8, 2007

பதிவுகள்: தமிழ்மணத்தில் இன்று

தமிழ்மணத்தில் இன்று அறிவியல்/நுட்பம் பகுதி (thamizmaNam : தமிழ்மணம் « இடுகைகள் « சென்ற நாட்கள்) என்று வகைசெய்யப்பட்ட சில பதிவுகள்:

  • தமிழ்பித்தன்: இலவச போன் உலகம் முழுக்க

  • நெஞ்சின் அலைகள்: இந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள் - சி. ஜெயபாரதன்

    பொருளடக்கம்:
    1. பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு
    2. விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை
    3. ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்
    4. செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

  • சினேகிதி: Bartholin's Gland Cyst ...அப்பிடின்னா?? (அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தைக் குறித்த கட்டுரை)

  • மிலிட்டரி (சமுத்ரா): அடுத்த வாரம் அக்னி பரிட்சை

  • GNU/Linux குறிப்பேடு (மு.மயூரன்): விஸ்தா என்ன விஸ்தா? - Beryl on Linux

  • குமிழி (ஜெயச்சந்திரன்): பார்லி, ஓட்ஸ் சாப்பிட்டு இதய நோயை குறையுங்க

    பொருளடக்கம்:
    1. பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள்.
    2. பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள் (காளான், மதுவம் இன்ன பிற குறித்த விளக்கங்கள்)
    3. பீற்றா குளுக்காங்களின் உடல் நலன்சார் பங்களிப்புகள்
    4. ஓட்ஸ் (Oats) இன் உடல் நலன் சார் சாதகமான இயல்புகள்.

  • வளங்குன்றா வளர்ச்சி (அரவிந்தன் நீலகண்டன்): கோதுமைக்கு ஆபத்து

Read More...

Saturday, April 7, 2007

நேர்காணல்: பேரா.வி.ராமநாதன்

புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன். தி நியூ யார்க் டைம்ஸ் இதை முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஹார்வார்ட், பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் இந்தக் கூற்றை 'நான்சென்ஸ்' என்று இகழ்ந்தார்கள். ஆனால், ராமநாதன் சொன்னதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.


பசுமையக விளைவு, புவிச் சூடேற்றம் ஆகிய சொற்றொடர்கள் அடிக்கடி காதில் விழும், மிகவும் அச்சுறுத்தும் சொற்றொடர்களாக உள்ளன. இவை கார்பன் டையாக்ஸைடால் மட்டுமல்ல, அதைவிட 10,000 மடங்கு அதிக மூலக்கூறு நிறை உள்ள குளோரோ·ப்ளூரோ கார்பன்களால் அதிகம் ஏற்படுகிறது என்றும், திறன்குறைந்த அடுப்புகளில் உண்டாகும் கரிப்புகையால் 'பழுப்பு மேகம்' உண்டாகிப் பரவுகிறது என்றும் கண்டுபிடித்துச் சொன்னார். 'வெப்பம் கூடும், பருவமழை தவறும், சூறாவளிகள் உண்டாகும், கடல்நீர் நிலத்தை விழுங்கும் என்றெல்லாம் கூறும் எனது ஆய்வு முடிவுகள் தவறாகப் போகுமானால் எனக்கு மகிழ்ச்சியே' என்று சொல்கிறார். ஆனால் ஒவ்வொன்றும் உண்மையாகி வருவதே இவரது நுண்மான் நுழைபுலத்துக்கும், ஆய்வுத் திறனுக்கும் சான்று.

இவர் வகித்த, வகிக்கும் பதவிகளின் பட்டியல் பிரமிக்க வைப்பது: மேதகு பேராசிரியர் மற்றும் இயக்குநர், வளிமண்டல அறிவியல் மையம், ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிட்யூஷன் ஆ·ப் ஓஷனோ கிரா·பி, கலி·போர்னியா பல்கலைக்கழகம் (லா ஜோலா, கலி.); மேதகு உறுப்பினர் (·பெல்லோ) அமெரிக்கன் அகாடமி ஆ·ப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸஸ், அமெரிக்கன் மீட்டியாரலாஜிகல் சொஸைட்டி, அமெரிக்கன் ஜியோ·பிஸிகல் யூனியன். 2004 ஆண்டில் இவர் போப் பாண்டவரின் அறிவியல் கழகத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார் (இதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் நோபல் பரிசு பெற்றவர் கள்). தற்போதைய இணைத்தலைமை விஞ்ஞானி, அட்மாஸ்·பெரிக் பிரவுன் கிளவுட் ப்ராஜெக்ட்; முன்னாள் இணைத்தலைமை விஞ்ஞானி, இண்டியன் ஓஷன் எக்ஸ்பெரி மெண்ட்; முன்னாள் தலைமை விஞ்ஞானி, சென்ட்ரல் ஈக்வடோரியல் பசி·பிக் எக்ஸ் பெரிமென்ட்; தலைமை ஆய்வாளர், NASAவின் எர்த் ரேடியேஷன் பட்ஜெட் எக்ஸ்பெரிமென்ட். மேலும் அறிய: http://www.ramanathan.ucsd.edu/

படகுக் காரில் செல்லவேண்டும் என்ற ஆசையில் அமெரிக்காவுக்கு வந்த இவர் இப்போது சிறிய காரையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். அதன் உபயோகத்தையும் குறைத்து, நடந்து சென்று பேருந்தைப் பிடித்து அலுவலகத்துக்குச் செல்கிறார்! சர். சி.வி. ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் தமிழர்களின் பட்டியலில் வீரபத்ரன் ராமநாதனும் சேருவாரா? சேரவேண்டும் என்பதை இந்த நேர்காணலில் அவர் கூறுபவை காட்டுகின்றன. நமது விருப்பமும் பிரார்த்தனையும் அதுதான். வாருங்கள் சந்திக்கலாம் பேராசிரியர் வி. ராமநாதனை...

பிர: உங்கள் சிறுவயது வாழ்க்கை மற்றும் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்.

ராம: கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் என் தாத்தா விவசாயியாக இருந்தார். பிறந்தது சென்னையில். பிறகு திருச்சி, மதுரை, பங்களூரு ஆகிய இடங்களில் படித்தேன். அப்பா ராணுவத்தில் இருந்த பின் விற்பனையாளராக மாறினார். அது எங்களைப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்றது. பங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எஞ்சினியரிங் படிக்கச் சென்றேன். செகந்திராபாதில் குளிர்சாதனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினேன். அப்போது தான் எனக்குப் பொறியியல் பிடிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

அடிப்படை ஆராய்ச்சியே எனக்கு விருப்ப மானதாக இருந்தது. இண்டியன் இன்ஸ்டி டியூட் ஆ·ப் சயன்ஸில் ஆய்வுக்குச் சேர்ந்தேன்.

பிர: எப்போது அமெரிக்கா வந்தீர்கள்?

ராம: 1970-ல் வந்தேன். ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள நியூ யார்க் மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன். செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களின் சூழலில் பசுமையக விளைவு ('கிரீன் ஹவுஸ் எ·பெக்ட்') என்பது பற்றி ஆய்வு செய்தேன்.

பிர: உங்கள் ஆய்வைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா? 'பழுப்பு மேகங்கள்' (Brown Clouds) என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ராம: நாம் புவிச் சூடேற்றம் அல்லது குளோபல் வார்மிங் என்பதிலிருந்து தொடங்கலாம். பிறகு பழுப்பு மேகத்துக்குப் போகலாம். புவிச் சூடேற்றத்தில் சில புரியாத புதிர்களைத் தேடும்போது எனக்குப் பழுப்பு மேகம் கிடைத்தது. நாமும் அப்படியே போகலாம். முதலில் புவிச்சூடேற்றம், பசுமையக விளைவு ஆகியவை என்ன? மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம். நாம் எதை எரித்தாலும் - அது காரில் பயன்படுத்தும் கேஸாக இருக்கலாம், அல்லது மரமாக இருக்கலாம் - அதிலிருந்து பசுமையக வாயு அல்லது கார்பன் டையாக்ஸைடு வெளியாகிறது. காரணம், பெரும்பாலான திடப்பொருள்களில் கரிமம் அல்லது கார்பன் உள்ளது. அது காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கரியமில வாயு ஆகிறது.

நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே இருக்கிறது. நூறாண்டு என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் அளவு. சென்ற சில நூற்றாண்டுகளில் மக்கள் தொகையும், தொழிற்சாலைகளும் மிகவும் பெருகி விட்டதால், கரியமில வாயுவின் அளவு கூடிக்கொண்டே போகிறது. வளிமண்டலத் தில் வீசும் காற்றினால் இந்தக் கரியமில வாயு இடம்விட்டு இடம் நகர்ந்து, இந்தப் புவியுருண்டையை ஒரு போர்வை போலச் சூழ்ந்துவிட்டது.

சரி, அதனால் என்ன என்று கேட்கலாம்.

குளிர்கால ராத்திரியில் நம்மை வெம்மை யாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்கிறோம்? ஒரு போர்வையைப் போர்த்திக் கொள்கிறோம். போர்வை வெப்பத்தை வேறெங்கிருந்தும் பெறுவதில்லை. உடலின் வெப்பத்தை வெளியே போகவிடாமல் பிடித்து வைத்துக் கொள்கிறது. இந்தக் கரியமிலப் போர்வையும் அதையேதான் செய்கிறது. பூமிப்பந்தின் வெப்பத்தைத் தப்பிக்க முடியாதபடி அமுக்கிவிடுகிறது. ஆகவே பூமி சூடாகிறது. இதுதான் பசுமையக விளைவும், புவிச்சூடேற்றமும்.

நாம் எவ்வளவு கரியமில வாயுவை வெளிவிடுகிறோம் என்று கேட்கலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள். சுமார் 7 பில்லியன் டன்கள்! அதன் எடை என்ன தெரியுமா? 6 பில்லியன் மக்கள் தொகையில் ஒவ்வொருவரும் ஒரு காரை வளிமண்டலத் தில் எறிவது போன்ற எடை. கற்பனையே செய்ய முடியாது. இதை இந்தியாவில், அமெரிக்காவில், ஆர்க்டிக் அன்டார்க்டிக் பகுதிகளில் அளந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன் கார்களை வளிமண்டலத்தில் எறிந்தது போன்ற எடை!

பிர: ஆச்சரியமாக இருக்கிறது. எப்போது கரியமில வாயு வளிமண்டலத்தில் கலப்பதைப் பற்றி முதன்முதலில் அறியப்பட்டது?

ராம: சுமார் 100 வருடங்களுக்கு முன், ஒரு பிரபல ஸ்வீடிஷ் விஞ்ஞானி இதைக் கண்டுபிடித்தார்.

பிர: நான் அதற்கு என்ன செய்ய வேண்டும்? எனது தேவைகள் நிறை வேறிவிடுகின்றன. எனக்கு அவற்றால் எந்தத் தொந்தரவும் இல்லையல்லவா?

ராம: அதற்குத்தான் நான் வருகிறேன். முதலில் அதன் விளைவு: சென்ற 30 ஆண்டுகளில் பசுமையக வாயுவின் வெளியேற்றம் எவ்வளவு அதிகமாகிவிட்ட தென்றால், முன் எப்போதும் இருந்ததைவிட பூமி அதிகமாக வெப்பமடைந்து விட்டது. 1980ல் நான் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை யில் 2000 ஆண்டில் இந்த வெப்பத்தை நாம் உணருவோம் என்று கூறியிருந்தேன். விஞ்ஞானிகள் 'ஆமாம், உலகம் வெப்பமடைந்து விட்டது' என்று ஒப்புக்கொள்கின்றனர்.

சரி, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு வருகிறேன்.

முதலில், பூமிக்கோளம் வெப்பமடைவதால் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதிக வெப்ப அலைகள் வீசும். சாதாரணமாக வெப்பம் 100 டிகிரி ·பாரன்ஹீட்டைத் தாண்டினால் அதை வெப்ப அலை (heat wave) என்று சொல்கிறோம். ஓர் இடத்தில் வழக்கமாக 98 டிகிரி வெப்பம் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். பசுமையக விளைவால் 2 டிகிரி வெப்பம் அதிகமாகி, அங்கே 100 டிகிரி ஆகிவிடும். அவையெல் லாம் வெப்ப அலை வீசும் பகுதிகளாகிவிடும்.

இரண்டாவதாக, கடல் மட்டம் உயர்ந்து விடும். கடற்கரை ஓரத்தில் இருக்கும் பகுதிகள் நீரில் முழுகிவிடும்.

கடல் மட்டம் ஏன் உயருகிறது? உங்கள் உடலில் வெப்பமானியை (தெர்மாமீட்டர்) வைத்தால் அதில் இருக்கும் பாதரசம் ஏன் உயருகிறது? வெப்பம் பொருள்களை விரிவடையச் செய்கிறது, அதனால்தான். இப்போதே கடல்மட்டம் சுமார் அரை அடி உயர்ந்துவிட்டதை நாம் பார்க்கிறோம். இந்தியாவிலும் பங்களாதேஷிலும் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். உலகின் மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அடுத்த 30, 40 வருடங்களில் 2, 3 மீட்டர் (சுமார் 10 அடி) கடல்மட்டம் உயர்ந்தால்! கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப் படுவார்கள்.

மூன்றாவதாக, ஆர்க்டிக் பெருங்கடல் பகுதி முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. பூமியின் வெப்பநிலையைப் பராமரிக்க அது உதவுகிறது. அது உருகினால் நமது சூழல் மிகவும் பாதிக்கப்படும்.

நான்காவதாக, சூறாவளிகள். டெக்சாஸில் ஏன் அத்தனை சூறாவளிகள் வருகின்றன? நியூ யார்க்கிலோ, இன்னும் வடக்கிலோ வருவதில்லையே. கடலின் வெப்பமான பகுதியில்தான் சூறாவளி பிறக்கிறது. கடலில் ஏராளமான ஆற்றல் இருக்கிறது. வடக்கு நோக்கிப் போகும்போது சூறாவளி வலு இழந்துவிடுகிறது. எனவே, கடலின் வெப்பம் அதிகரிப்பதால் அதிக எண்ணிக்கையில் சூறாவளிகள் தோன்றுகின்றன என்பதை இப்போது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிக கேட்ரீனாக்கள் தோன்றும்.

இன்றைக்கு நாம் கார் ஓட்டுவதால் வளி மண்டலத்தில் கரியமில வாயு அதிகமாகும். அது அங்கே 100 ஆண்டுகள் இருக்கும். இன்றைக்கு 15 வயதாக இருக்கும் ஒருவரை அது பின்னாளில் பாதிக்கலாம். நாம் இதற்குப் பரிகாரம் எதுவும் செய்யாவிட்டால், இன்னும் 75 ஆண்டுகளில் பூமி 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட அதிகச் சூடாக இருக்கும்.

கிரீன்லாந்தின் இருக்கும் பனிப்பாறை உருகும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது நடந்தால் உலகம் முழுவதிலும் வெள்ள அபாயம் ஏற்படும். கிரீன்லாந்தின் பனிப் பாறைகளும் ஆர்க்டிக் பனியும் உருகினால் கடல்மட்டம் 8 மீட்டர் (25 அடி) உயர்ந்து விடும்.
பசுமையக விளைவுகளில் சில இவை.

எனக்கு 62 வயதாகிறது. இந்த அபாயங்கள் ஏற்படும்போது நான் இருக்கமாட்டேன். நமது குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இதை விட்டுச் செல்கிறோம். நாம் அதிர்ஷ்ட சாலிகள், அழகானதொரு புவியைப் பெற்றோம். அதை நாசமாக்கி நம் குழந்தை களுக்குக் கொடுக்கிறோம்.

பிர: கார்பன் டையாக்ஸைடு கலைய 100 ஆண்டுகள் ஆகிறதென்று சொன்னீர்கள். அதை விரைவுபடுத்த முடியாதா?

ராம: அதற்கு முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அது பெரிய டிரில்லியன் டாலர் வேலை. நாம் ஆற்றலைத் திறமையாகப் பயன்படுத்துவது எளிய மாற்றுவழி. அந்தத் துறையில் நான் அறிஞன் அல்ல. CO2வைக் காற்றிலிருந்து அகற்ற முயற்சிக்கிறார்கள்; முடியுமா என்று தெரியவில்லை.

பிர: சரி, புவிச் சூடேற்றத்தை மாற்ற நாம் என்ன செய்யலாம்? மாற்ற முடியா விட்டாலும், நமது வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படாத அளவுக்கு ஏதேனும் செய்ய முடியுமா?

ராம: நமது வாழ்க்கைத் தரம் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதைச் சொல்லமுடியாது. ஆனால் நமது சந்ததிகள் தாம் அதன் விளைவு களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிர: புரிகிறது. அப்படியானால் அதன் போக்கை மாற்றியமைக்க முடியுமா?

ராம: முதலில் நாம் CO2 எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதைக் காண வேண்டும். புவியின் மொத்த வெளிப்பாட்டில் பாதி மேற்கத்திய உலகிலிருந்து, அதாவது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளர்ச்சி யடைந்த நாடுகளிலிருந்து வருகிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது முழு உலகமும் தான். இங்கே நாம் செய்யும் காரியங்களால், குற்றமே செய்யாத இந்தியா, ஆ·ப்ரிக்கா, தெற்கு ஆசியா ஆகியவற்றில் வசிப்போரும் துயரத்தை அனுபவிப்பர். இப்போது சைனாவும் மிக அதிகமாக CO2வை வெளிவிடுகிறது.

முன்னேறிய நாடுகள் இதைச் சரி செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டன. என்ன செய்யலாம்?

முதலில், ஆற்றலைச் சேமிக்க வேண்டும். மின்னணுக் குப்பைகளை உலகின் பிற பகுதிகளில் கொட்டக்கூடாது.
இரண்டாவது, வற்றாத ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி நாம் பயன்படுத்துவதைப் போல 10,000 மடங்கு ஆற்றலைத் தரும். சமையல் போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும்.

மூன்றாவது, துயர் அகற்றல். அதாவது, CO2 வெளியேற்றத்தைக் குறைக்கவேண்டும். இதற்குப் பல வழிகள் உள்ளன. உதாரண மாக, நான் என் அலுவலகத்தில் இருந்து நான் 4 மைல் தூரத்தில் வசிக்கிறேன். நான் அதற்குக் காரில் போவதில்லை. சிறிது தூரம் நடந்து போய் பேருந்தில் போகிறேன். ஓர் ஆண்டில் எவ்வளவு CO2 வெளியேற்றத்தை நான் மட்டுமே குறைக்கிறேன் தெரியுமா? அரை டன்! 100 மில்லியன் அமெரிக்கர்களும் நடந்து போகத் தொடங்கினால் கூட நாம் வெளியிடும் CO2ல் 1 சதவீதம் தான் குறையும். அதற்கு எவ்வளவு போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். எளிதல்ல. அத்தனை எளிதாக இருந்தால் அமெரிக்கா செய்திருக்கும்.

பிர: இது ஓர் உலகப் பிரச்சினை என்று கூறினீர்கள். இது தொடர்பாக கியேட்டோ ஒப்பந்தம் உள்ளதே. அதனால் பயன் உண்டா?

ராம: கியோட்டோ ஒப்பந்தம் மட்டுமே பெரிய விளைவை ஏற்படுத்திவிடாது. மிகச் சிறிய அளவில் குறைப்பதைப் பற்றித்தான் அது பேசுகிறது. ஆனால், அது ஒரு விவாத/ஒப்பந்த மேடையைக் கொடுத்துள்ளது என்ற அளவில் நான் ஆதரிக்கிறேன். நாம் எதிர்பாராத ஒரு அபாயம் நேருமென்றால் அதைப்பற்றி எடுத்துச் சொல்ல, நடவடிக்கை எடுக்க அது ஒரு மேடை.

பிர: நான் ஓர் இந்தியராக அல்லது சீனராக இருந்தால், 'இப்போதுதான் நாங்கள் பொருளாதார வளர்ச்சி பெறுகிறோம். அதன் பலனாக எங்கள் நடுத்தர வகுப்பு வாழ்க்கையில் உயர்வை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. பிறர் நெடுங்காலமாகச் செய்த தவறுகளுக்காக நாங்கள் எங்கள் வளர்ச்சியைக் குறைத்துக்கொள்ள முடியாது' என்று சொல்லலாம் அல்லவா?

ராம: அப்படிச் சொல்ல முடியாது. இன்றைய நிலையில் யாரையும் குறை சொல்லிப் பயன் இல்லை. எல்லோருமே ஒத்துழைத்தாக வேண்டும். அதனால்தான் கியோட்டோ ஒப்பந்தத்தில் இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி பெறும்வரை சலுகை தரப்பட்டுள்ளது.

பிர: அதே காரணத்துக்காகத் தானே பிற நாடுகளும் கியோட்டோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுக்கிறார்கள்?

ராம: அதுதான் பிரச்சினை. இந்தியாவும் சீனாவும் ஒரே நிலையில் இல்லை. சீனா வளர்ந்துவிட்டது. அது ஒரு பெருமளவில் CO2 வெளியிடும் நாடு. தற்போது சீனா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஆனால் நடுத்தர வகுப்பு அனுபவிப்பதைப் பற்றியதல்ல இது. இதன் பலன்கள் எட்டாத, மீதமிருக்கும் 700 மில்லியன் கிராம மக்கள் துன்புறுவதைப் பற்றியது. அவர்கள் முன்னேறி யாக வேண்டும். உலகம் இதைப் புரிந்து கொள்ளும், ஒப்புக்கொள்ளும் என்று நினைக்கிறேன். உடனடியாக இந்தியா CO2வைக் குறைக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. ஒவ்வோர் அமெரிக்கரும், நீங்களும் நானும் உட்பட, ஓர் ஆண்டில் 20 டன் CO2வை வெளியேற்றுகிறோம். ஓர் இந்தியர் ஓர் ஆண்டில் அரை டன் தான் வெளியேற்றுகிறார். நம்மைவிட 40 மடங்கு குறைவு.

இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்று சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். நீங்கள் CO2 வெளியீட்டைப் பாருங்கள் என்று அவர் களுக்குக் கூறுகிறேன். அதன்படிப் பார்த்தால் அமெரிக்க மக்கள்தொகை 4 பில்லியன். எந்தத் தெற்காசிய நாட்டையும் விட இங்கே 40 பங்கு CO2 வெளியீடு அதிகம். ஆக, இதனால் எதிர்வரும் சமுதாய, அரசியல், நெறிமுறைப் பிரச்சினைகளை எண்ணிப் பார்த்து, உலகம் ஒன்றுபடுவதே நல்லது.

ஐ.பி.சி.சி. (Inter-governmental Panel of Climate Change) என்று ஒன்று இருக்கிறது. அது சுமார் 1000 விஞ்ஞானிகளையும் பொருளாதார நிபுணர்களையும் கொண்ட அமைப்பு. 2007 பிப்ரவரி 2 அன்று அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். இவ்வமைப்பின் தலைவர் ஒரு இந்தியக் குடிமகன். பெயர் ராஜேந்திர பச்சோரி. புவிச் சூடேற்றத்தில் அவர் உலக அளவில் சிறந்த அறிஞர். ஒரு பொருளியலாளர்.

பிர: ஒரு கேள்வி. வாகனங்களை விட அதிகமாக கால்நடைகளால் செய்யப் படும் வெளியீடுகள் புவிச் சூடேற்றம் செய்கின்றன என்கிறார்களே. ஒப்புக் கொள்கிறீர்களா?

ராம: உண்மையல்ல. கால்நடைகள் மீத்தேன் என்ற பசுமையக வாயுவுக்குக் காரணமா கின்றன. அது இயற்கை வளிமம். CO2 செய்யும் புவிச் சூடேற்றத்தில் 20 சதம்தான் மீத்தேனால் ஆகிறது. சென்ற 10 ஆண்டு களில் மீத்தேன் வெளியீடு அதிகரிக்க வில்லை. CO2தான் கவலை தருவதாக இருக்கிறது. அதிலும் கால்நடைகளின் CO2 வெளியீடு மிகக் குறைவு.

பிர: கலவை எரிபொருள் வாகனங்கள் (hybrid vehicles) எந்த அளவு உதவும்? மெத்தனால், மரத்தூள் கட்டிகள் போன்றவற்றை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமா? குழல் விளக்கு களை ஆஸ்திரேலியா தடைசெய்யப் போகிறது என்று சொல்கிறார்களே. இதெல்லாம் உதவுமா?

ராம: உதவும். நான்கூட குழல் விளக்கு களிலிருந்து 'காம்பேக்ட் ·ப்ளூரசன்ட் விளக்கு'களுக்கு (CFL) மாறிவிட்டேன். அதனால் ஏகப்பட்ட மின்சாரம் மிச்சமாகிறது. பணமும்தான். ஒரு 10 வாட் CFL, 60 வாட் குழல்விளக்கின் ஒளியைத் தருகிறது.

புவிச்சூடேற்றத்தின் காரணமாகப் பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன. இவற்றை இந்தியா பயன்படுத்திக் கொள்ள லாம். இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனால் (Ethanol) எரிபொருளைப் பயன்படுத்தினால் மத்தியகிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியே வேண்டாமே.

பிர: எத்தனால் எதிலிருந்து எடுக்கப்படுகிறது?

ராம: பண்ணைப் பயிர்களிலிருந்து. எதை எரிக்க முடிந்தாலும் அதை எரிபொருளாக் கலாம் என்று நான் சொன்னதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். கரும்பு, மக்காச் சோளம் ஆகியவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம்.

பிர: ஓர் ஏழை நாடு, தனது பயிர்களை உணவுக்குத்தானே முதலில் பயன் படுத்தும். எரிபொருள் தயாரிப்பது இரண்டாம் பட்சம் தானே?

ராம: நல்ல கேள்வி. அயோவாவின் விவசாயிகள் அப்படித்தானே மறுக்கிறார்கள். அப்போது பெரிய நிறுவனங்கள் வருகின்றன. எந்திரங்களை நிறுவுகிறார்கள், பயிர்களை வளர்க்கிறார்கள், அவற்றை எந்திரங்கள் மூலம் எரிபொருள் ஆக்குகிறார்கள்.

இந்தியா எரிபொருளுக்காக எவ்வளவு பணம் செலவழிக்கிறது என்று தெரியுமா? மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product-GDP) சதவீதமாகப் பார்த்தால், எரிபொருள் செலவு மிக அதிகம். எனவே, உள்நாட்டிலேயே இந்தத் தொழில் நுணுக்கத்தை மேம்படுத்தி, விவசாயிகளுடன் சேர்ந்து செயல்பட்டால் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கலாம். விவசாயி களுக்குத் தேவையான எந்திரங்களைக் கொடுக்க வேண்டும், எரிபொருளைத் தயாரிக்க வேண்டும். இதில் அரசாங்கம், தொழில்துறை, கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் இதற்கான அரசு எந்திரம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், இதைச் செய்ய முடியும். இதை அரசுகள் தாமே செய்ய மாட்டா. புவிச் சூடேற்றம் இந்தக் கட்டாயத்தை உண்டாக்கியிருக்கிறது.

நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் அழிவும் ஏற்படலாம். எனவே நமது செயல்களை நாம் எடைபோட்டுச் செய்ய வேண்டும்.

பிர: சூழல் அழிவு என்று எதைச் சொல்கிறீர்கள்?

ராம: எரிபொருள் வேண்டும் என்பதற்காக நாம் ஒரு காட்டை அழித்துவிட்டு அங்கே எத்தனாலுக்காகக் கரும்பு பயிரிடக் கூடாது. காடுகள் கரியமில வாயுவை எடுத்துக் கொள்கின்றன. நாம் கரியமில வாயுவை வெளிமூச்சில் அனுப்புகிறோம். அதனால்தான் வீட்டில் செடிகளை வளர்க்கிறோம். அவை CO2வை எடுத்துக்கொண்டு பிராணவாயுவைத் தருகின்றன. மரத்தின் தண்டுப்பகுதியில் CO2 இருக்கிறது. மரங்களை அழித்தால் CO2 அதிகப்படும். எனவே கவனம் தேவை.

'கவனமாக' என்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? உதாரணத்துக்கு, அமெரிக்காவில் ஏராளமான வேளாண் நிலம் உள்ளது; இந்தியாவில் இல்லை. அங்கே வேளாண் நிலம் வேண்டுமென்றால், எங்கு முடியுமோ அங்கே, காட்டை அழிக்கலாம். ஆனால் அது தவறான வழி. தரிசு நிலங்களை மேம்படுத்திச் செய்ய வேண்டும். ஒரு பிரச்சினையைத் தீர்க்கிறேன் என்று இன்னொரு பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடாது.

பிர: அண்மையில் உங்களது 'தனிநபர் கரிமச் சுவடு' (Personal Carbon Footprint) பற்றி அதிகம் கேள்விப்படுகிறேன். அதன் பொருள் என்ன?

ராம: அடிப்படையில், குறிப்பிட்ட ஆற்றலைப் பயன்படுத்தி எவ்வளவு கரிமத்தை வெளியிடு கிறோம் என்பதுதான் அது. நமது சுவட்டைக் குறைக்க வேண்டும். ஒரு வேன் வைத்திருப் பவர் அதற்கு பதிலாக ஒரு சிறிய காரைப் பயன்படுத்தினால் உங்கள் சுவடு சிறியதா கிறது. அதாவது, அதே தூரத்துக்குச் செல்லும்போது, நீங்கள் மூன்று மடங்கு குறைவான கார்பனை வெளியிடுகிறீர்கள்.

பிர: 'கரிமத் தள்ளுபடி' (Carbon offset) என்று கூறுகிறார்களே, அது என்ன? குற்றவுணர்வைக் குறைப்பதுதானா, இல்லை அதனால் அளவிடத்தக்க நல்ல பலன் உண்டா?

ராம: இதில் எனக்கு ஞானம் இல்லை. பசுமையக விளைவுகளைப் பற்றி நான் கூறியது போல அத்தனை தீவிரமாக நான் இந்த விஷயத்தில் சொல்வதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இந்த நாட்டில் காற்று மாசுபடுதலைக் கரிமத் தள்ளுபடியால் குறைக்கிறார்கள். அதை 'கந்தக வணிகம்' (Sulphur Trading) என்பார்கள். ஒவ்வொரு தொழில்துறைக்கும் சுற்றுச்சூழலை இந்த அளவுதான் மாசுபடுத்த லாம் என்ற அளவு உண்டு. சில துறைகள் அந்த வரம்புக்குள் நிற்பதில்லை. அவர்கள் போய், தம்மைவிட அதிகத் திறனோடு செயல்படும் மற்ற தொழில்துறையிடம் அவர்களது கரிம உபரியை வாங்கிக் கொள்வார்கள்.

உதாரணமாக, நீங்கள் அமெரிக்காவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இங்கே அதிக அளவு கரிமத் திறன் எட்டப்பட்டு விட்டது. நீங்கள் அதே பொருளை உற்பத்தி செய்கிற, ஆனால் அதிகக் கரிமத்தை வெளிவிடுகிற ஒரு இந்தியக் கம்பெனியில் முதலீடு செய்து, அவர்களது கரிம வெளியீட்டைக் குறைக்கும் படியான தொழில்நுணுக்கத்தைக் கொண்டு வரலாம். இப்போது, அமெரிக்காவில் 100 டன் CO2வை வெளியிடுகிறேன், ஆனால் இந்தியாவில் 100 டன்னைக் குறைத்து விட்டேன் என்றால் அதுதான் கரிம மிச்சம். தற்போது இது மிகக் குறைவாக செய்யப் படுகிறது. ஆனால், பெரிய அளவில் வரும் போது தெற்காசியாவுக்கு மிகவும் பயன் தரும், அவர்களது தொழில்நுணுக்கம் ஏராளமாக மேம்படும்.

ஒரு வளரும் நாட்டுக்குப் பயன் தருவது மட்டுமல்ல. நூறு ஆண்டுகள் சூழலில் இருக்கப் போகும் CO2வை உலகின் எந்தப் பகுதியில் குறைத்தாலும், எல்லோருக்கும் நல்லதே.

பிர: வேறு விஷயங்களுக்குப் போவதற்கு முன்னால் ஒரு கேள்வி. பொருளாதார ரீதியில் வெற்றிதரும் பசுமைக் கொள் கையை வகுத்து, சுற்றுச் சூழலையும் பொருளாதார வளர்ச்சியையும் சம நிலைப்படுத்துவது சாத்தியமா?

ராம: உண்மையாகவே எனக்கு அது தெரியாது. நான் பொருளாதார நிபுணன் அல்ல. ஆனாலும் சொல்கிறேன். சமுதாயம் அதற்கான விலையைத் தரத் தயாராக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். வேறு வழியில்லை.

பிர: சரி, பழுப்பு மேகங்கள் குறித்துப் பேசலாமா?

ராமா: அவசியம். அதிலும் இந்தியா குறித்த சில விஷயங்கள் மிக முக்கியமானவை. இமாலயப் பனி உருகுவதும், பருவகாலங் களும் குறித்து இந்தியா சிந்திக்க வேண்டும். சில தென்னிந்திய கிராமங்களில் நாங்கள் ஒரு ஆய்வுத்திட்டம் செய்துவருகிறோம். தென்றல் வாசகர்களுக்கு அது சுவையான விஷயம்.
Click Here Enlargeபிர: சொல்லுங்கள்.

ராம: மாநகரங்களின் புகைமூட்டம்தான் பழுப்பு மேகம் எனப்படுவது. வானம் தெளிவில்லாது இருக்கும். குறிப்பாக டெல்லி போன்ற வட இந்திய நகரங்களில் குளிர் காலத்தில் புகைமூட்டமாகத் தெரியும்.

துகள்களால் மாசுபடுதலுக்கு ஒரு பொதுப் பெயர்தான் பழுப்பு மேகம். மாசுபடுத்தும் வாயுக்களை நமக்குத் தெரியும்; ஆனால் துகள்களை நாம் காண்பதில்லை. சமைக்கும் போதும், மரம் எரியும் போதும் அதிலிருந்து புகை வருகிறது. அவையெல்லாம் துகள்கள் தாம். துகள் என்பது நகரங்களின் பிரச்சினை என்றுதான் நினைத்திருந்தோம். ஓர் ஆய்வு செய்தபோது அந்த எண்ணம் மாறிவிட்டது. 6 விமானங்கள், 2 கப்பல்கள், ஏராளமான செயற்கைக் கோள்கள் இந்த ஆராய்ச்சியில் பயன்பட்டன. சுமார் 25 மில்லியன் டாலர் செலவாயிற்று. அதற்கு நான் தலைமை விஞ்ஞானியாக இருந்தேன். இந்தியப் பெருங்கடல், அரேபியப் பெருங்கடல் ஆகியவற்றில் செய்தோம். சென்ற 20 ஆண்டுகளில் செய்யப்பட்ட முழுமையான ஆய்வுகளில் இது ஒன்று. இதில் பங்கேற்ற 200 விஞ்ஞானிகளில் 50-60 பேர் இந்தியர்கள். பிப்ரவரி-மார்ச் (பனிக்கால) மாதங்களில் வங்காள விரிகுடா, அரேபியக் கடல் ஆகியவற்றின் மேற்புறம் முழுவதும் கனத்த, பல அடுக்குப் புகைப்படலங்களால் மூடப் பட்டிருந்தது. இது நகர்ப்புறப் பிரச்சினை அல்ல, உலகின் பிரச்சினை என்று தெரிந்தது.

உங்கள் டூ-ஸ்ட்ரோக் எஞ்சின் புகை உட் பட்ட, நகரத்தில் வெளிப்படும் புகையாகத் தான் பழுப்பு மேகம் தொடங்குகிறது. கிராமங்களில் விறகு, சாண வறட்டியை எரித்துச் சமைப்பதால், துகள்களால் ஆன புகை வெளி வருகிறது. காற்று வீசும்போது அது கடலின் மேற்பகுதியைச் சென்று அடைகிறது. சூரிய ஒளி பூமியை எட்டாதபடி அது தடுக்கிறது. சுமார் 10 சதவீத ஒளியை அது தடுத்து விடுகிறது.

நாம் பார்க்கும் பழுப்பு மேகம் என்பது கரிப்புகை. விறகடுப்பு, ஸ்கூட்டர், ஆட்டோ ரிக்ஷா போன்றவற்றிலிருந்து முழுதும் எரியாத கரிப்புகை வெளிவரும். இது புவிச் சூடேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இமாலயப் பனிப்படிவுகள் உருகி ஓட இது ஒரு முக்கியக் காரணம்.

பிர: பழுப்பு மேகப் பிரச்சினை இந்தியா வுக்கு ஏன் மிக அதிகம்?

ராம: இந்தியா அதிகம் மாசுபடுத்துவதாலா என்றால், இல்லை. இந்தியாவைப்போல் 3-4 மடங்கு அமெரிக்கா மாசுபடுத்துகிறது. அமெரிக்காவில் காற்று வீசி, புகையை அகற்றிவிடுகிறது. இந்தியாவில் சுமார் 6 மாத காலம் (அக்டோபர் முதல் மே வரை) வறண்ட பருவம் உள்ளது. ஜூன் மாதத்தில் மழை வந்ததும் அப்படியே சொர்க்கமாகிவிடுகிறது. தென்னிந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் அனல் தீய்க்கிறது; காற்று வறண்டு போய், அசையாமல் நிற்கிறது. மாசுப் படலம் அடர்த்தியாகிக் கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது காணமுடிகிறது. பெர்க்லி மற்றும் இந்திய மருத்துவர்களின் ஆய்வுகள், இந்தக் கரிப் புகைப் படலத்தால் சுமார் அரை மில்லியன் பெண்கள், குழந்தைகளுக்கு மரணம் ஏற்பட்டிருப்பதாக நிரூபித்திருக்கின்றன.

பிர: இதை எப்படித் தவிர்க்கலாம் அல்லது தடுக்கலாம்?

ராம: புகை உண்டாவதைக் குறைப்பதுதான் முதல் வழி. தூய தொழில்நுட்பம் (சூரிய அடுப்பு, பயோகேஸ் உற்பத்தி) பயன்படுத்து வதன் மூலம் இதைச் செய்யலாம். ஐக்கிய நாடுகள் சபைக்கு நான் திட்டம் கொடுத் திருக்கிறேன். தஞ்சாவூரில் உள்ள 56 கிராமங்கள் சேர்ந்தது பெரியார்புரா http://www.periyarpura.org. அங்கே சூரிய அடுப்பு, பயோகேஸ் உற்பத்தித் திட்டத்தை அமுல் படுத்த நிதியுதவிக்கு முயற்சி செய்து வருகிறேன். இவற்றிலிருந்து CO2 வெளியா வதே இல்லை என்பதுதான் சிறப்பு. கரிப்புகை வெளியாகாமல் சமைக்கலாம் என்பதை இந்தியாவுக்கு நான் நிரூபிக்க விரும்புகிறேன்.

இதற்கு 'சூர்யா திட்டம்' (Project Surya) என்று பெயர். இதற்காக நான் தென்னிந்தியவிலுள்ள பல லாப நோக்கற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். இந்தியா தன்னையறியா மலே பெரிய பிரச்சினையில் முழுகிவிடுமோ என்று அஞ்சுவதால் இதைச் செய்கிறேன். இதில் எனக்கு அனுபவம் இல்லை என்றாலும் செய்கிறேன். அமெரிக்காவின் பரப்பு அதிகம், மக்கள்தொகை குறைவு; அதனால் பழைய தொழில்நுணுக்கம் பரவாயில்லை. ஆனால் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி அதிகம். ஏதாவது செய்தாக வேண்டும். இப்போதே.
அதனால்தான் நான் அறிவியல் துறையி லிருந்து நீங்கிச் சென்று, சமுதாய விஞ்ஞானி களுடன் சேர்ந்து பணிசெய்கிறேன். 'என்னு டைய பணியைப் பாருங்கள். இதைப் பல இடங்களிலும் தக்கபடி விரிவுபடுத்திச் செய்யுங்கள்' என்று நான் பல இந்திய விஞ்ஞானிகளுக்கு எழுதியிருக்கிறேன். அதாவது, கிராமப்புறங்களில். எனது இலக்கு கிராமங்கள்தாம்.

பிர: இந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

ராம: கலவையாக இருக்கிறது. அதிலும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் புவி சூடேறு கிறது என்பதையே சந்தேகிக்கிறார்கள். வேறு யாருமே சந்தேகப்படவில்லை.

பிர: ரிபப்ளிகன் செனட்டர்களும் சந்தேகப் படுகிறார்கள் போல இருக்கிறதே...

ராம: நான் விஞ்ஞானிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். அமெரிக்காவில் 98-99 சதவீதம் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஓரிருவர் எப்போதுமே சந்தேகப்படுவார்கள். ஆனால் ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள். முடிவுகளை அமெரிக்க விஞ்ஞானிகளோடு சேர்ந்து வெளியிடுகிறார்கள். இந்தியாவிலும் இப் போது இதைப்பற்றி அக்கறை தோன்றியிருக் கிறது. நான் எழுதிய ஆய்வுக்கட்டுரை இந்தியப் பிரதமருக்குப் போயிருக்கிறது. இதைப்பற்றிப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

பழுப்பு மேகம் குறித்து ஆழ்ந்த அறிவு இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கிறது. ஆகவே, நான் கவலைப்படவில்லை. அது நடக்கும். அவர்களே வழி கண்டுபிடிப்பார்கள்.

'நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டீர்களே அதுதான் எனக்கு முக்கியம். பல ஊடகங்கள் என்னிடம் இந்தக் கேள்வி யைக் கேட்டுள்ளன. பழுப்பு மேகத்தைக் குறைத்தாக வேண்டும். அதற்குப் பன்னாட்டு அமைப்புகள் உதவ வேண்டும். மேல் நாடுகள் கீழை நாடுகளுக்கு தொழில்நுணுக்கத்தைத் தரவேண்டும். புவிச் சூடேற்றம், கரியமில வாயு வெளியாதல் ஆகியவற்றை இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் திறம்படக் குறைக்கலாம். அதனால் பல இயற்கைப் பேரழிவுகளைத் தவிர்க்கலாம்.

பிர: 'சூர்யா திட்டம்' எவ்வளவு காலத்துக்கானது?

ராம: திட்ட வரைவைப் பல கொடையாளி களுக்கு அனுப்பி வருகிறோம். இன்னும் வேலை தொடங்கவில்லை. 'பிரிட்டிஷ் பெட்ரோலியம்' நிதியுதவி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளது. இந்தியாவிலிருந்தும் புரவலர் களைப் பெற ஆசைப்படுகிறேன். இல்லா விட்டால் அது 'இன்னும் ஒரு வெளிநாட்டுத் திட்டம்' ஆகிவிடும். அதை இந்தியா தனதாக்கிக் கொள்ளவேண்டும். அமெரிக்கா வில் இருக்கும் சில இந்திய வர்த்தகர்களையும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறேன்.

பிர: இந்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் உங்களோடு தொடர்பு கொண்டு, இதில் நீங்கள் அடைந்த முன்னேற்றத்தைப் பற்றி அறிய விரும்பு கிறோம்.

ராம: டிசம்பர் மாதத்தில் வேலையைத் தொடங்கிவிடுவோம் என நம்புகிறேன். அப்போது பேசுவோமே.

பிர: போப்பாண்டவரின் அறிவியல் கழகத்தில் (Papal Science Academy or Pontifical Academy of Sciences) நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி இன்னும் அதிகம் அறிய விரும்புகிறேன். அது ஒரு குறிப்பிட்ட காலப் பதவியா? இல்லை, வாழ்நாள் பதவியா?

ராம: ஓ, அது வாழ்நாள் பதவி. போப் இரண்டாம் ஜான் பால் தாமே என்னை இதில் நியமித்தார். அண்மையில் போப் பெனடிக்ட் அவர்களையும் சந்தித்தேன். நானும் இரண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகளும் அகாடமியில் பூமி வெப்பமடைவதைப் பற்றிப் பேசினோம். உடனேயே போப் அவர்கள் இந்தப் பிரச்சினையைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று வலுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். இந்த அறிக்கை கத்தோ லிக்கத் திருச்சபைகளுக்கு வினியோகிக்கப் படுகிறது.

பிர: இந்தக் கழகத்தின் பணி என்ன?

ராம: இது ஒரு சுதந்திரமான அமைப்பு. இதற்கும் சமயப் பணிக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி, பல முக்கியமான விஷயங்கள், தத்துவ ரீதியான விஷயங்கள் ஆகியவற்றை விவாதிக்கிறோம். அவற்றைப் பற்றிய ஆய்வறிக்கைகள் எழுதுவோம். அவர்கள் அவற்றைப் பதிப்பிக் கிறார்கள்.

பிர: சற்றே சர்ச்சைக்குரிய கேள்வி என்றாலும் உங்களிடம் கேட்கிறேன். விஞ்ஞானம், பரிணாமம், அறிவார்ந்த வடிவமைப்பு ஆகியவற்றையும் கிறிஸ்தவ இறையியலையும் போப்பாண்டவர் எவ்வாறு இசைவிக்கிறார்?

ராம: இது மிகச் சிக்கலான விஷயம். எனக்குத் தெரியாது. இந்த ஆண்டில் எமது கழகம் பரிணாமம், அறிவியல், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மிகச் சிறந்த விஞ்ஞானிகள் இதில் பங்கேற்கிறார்கள். கழகத்தின் விஞ்ஞானிகளில் பாதிப்பேர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதைப் பற்றி விவாதிப்பார்கள். இதனால் இறையியல் சிந்தனை மாறுமா? எனக்குத் தெரியாது. குறைந்தபட்சம், சர்ச்சைக் குரியவற்றை விவாதிக்க ஓர் அரங்கம் கிடைக்கிறது.

பிர: இந்த பூமிக் கோளத்தை இன்னும் நல்ல வசிப்பிடமாக விட்டுச் செல்ல வேண்டுமென்றால், தங்கள் தினசரி வாழ்க்கையில் செய்ய வேண்டிய 5 எளிய செயல்களைத் 'தென்றல்' வாசகர் களுக்குச் சொல்லுங்கள்...

ராம: முதலில், ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது, மறுசுழற்சி (recycling) செய்யவேண்டும். அதனால் நமது கரிமத் தடம் குறையும்.

மூன்றாவது, பெரிய கார்களைத் தவிர்த்து சிறிய கார்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் நிறையப் பணத்தையும் சேமிக்க முடியும்.

எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதற்காக யோகி ஆகிவிடுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் இப்போது செய்பவற்றையே இதைவிடக் குறைந்த சக்தியைப் பயன் படுத்திச் செய்யவேண்டும்.

நீங்கள் புவிச் சூடேற்றம் பற்றி நினைக்க வேண்டாம். நாம் வந்தபோது பூமி எப்படி இருந்ததோ அப்படியே மகனுக்கும் பேரனுக் கும் விட்டுச் செல்லவேண்டும் என்று நினைத்தால் போதும்.

அமெரிக்காவில் விரயம் மிக அதிகம் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் குழந்தை கள் ஏதாவது செய்ய முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு ரெஸ்டாரண்ட்டில் ஒரு குவளை தண்ணீர் கேட்டால், அதில் நிறைய பனிக்கட்டியைப் போட்டுத் தருகிறார்கள். அதில் ஒரு வாய் குடித்துவிட்டு மீதியை வீணாக்குகிறோம். அத்தோடு சேர்ந்து ஆற்றலும் சாக்கடையில் போகிறது. அதைக் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

CFLலைப் பற்றிப் பேசினோம். குழல் விளக்குகளை CFLகளைப் பொருத்த வேண்டும் என்று சொல்லிப் பெற்றோரைக் குழந்தைகள் தொணதொணக்க வேண்டும். இளைஞர்களின் கவனத்தை இதை நோக்கித் திருப்புவது எளிது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையில் நான் 2000 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் இதைப்பற்றிப் பேசப்போகிறேன். அவர்கள் உலகெங்கிலும் இருந்து வருபவர்கள்.

பிர: உங்கள் கருத்துகளுக்கு நன்றி. விரைவில் உங்களை நோபல் பரிசு பெற்றவராகச் சந்திக்க விரும்புகிறோம்.

ராம: (புன்னகைக்கிறார்) நன்றி.



'நான்சென்ஸ்!'

எனது பிஹெச்.டி. ஆய்வை முடித்துவிட்டு 1973ல் லேங்லியில் உள்ள NASAவில் சுமார் ஒன்றரை வருடம் பணிசெய்தேன். அப்போது எனது ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டேன். அதுவரை கரியமில வாயு மட்டும்தான் பசுமையக வாயு என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். குளோரோ·ப்ளூரோ கார்பன் (CFC) என்கிற மிக ஆபத்தான இன்னொரு வாயுவையும் நாம் வெளி விடுகிறோம் என்று நான் கண்டுபிடித்தேன். இந்த CFCக்களை நாம் குளிர்சாதனங்களில் குளிர்விக்கும் பொருளாகப் பயன் படுத்தினோம். ஷேவிங் க்ரீம் போன்றவற்றில் நீங்கள் அந்த டப்பாவை அமுக்கினால் அது பீய்ச்சிக்கொண்டு வருவதும் CFCயால் தான்.

CFCக்களின் மூலக்கூறு நிறை (molecular mass) கரியமில வாயுவினதைப் போல 10,000 மடங்கு என்று கண்டுபிடித்தேன். அது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். நான் அப்போதுதான் முனைவர் பட்டம் பெற்றிருந்தேன். என்னை யாருக்கும் தெரியாது. இதை நியூ யார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஹார்வர்ட், பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் இதை 'நான்சென்ஸ்' என்றார்கள். எனது கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் விஞ்ஞானிகள் சமூகத்துக்குப் புரிய ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. அதற்குப் பிறகு பல வாயுக்களைக் கண்டறிந்தார்கள். இதைத் தவிரவும் பல பசுமையக வாயுக்களை நாம் வளிமண்டலத்தில் விடுகிறோம்.


பருவ மேகத்தைத் தடுக்கும் பழுப்பு மேகம்

சூரிய ஒளியால் கடல் நீர் சூடாகி மேகம் உருவாகி மழையாக வருகிறது. ஆனால் இந்தப் பழுப்பு மேகம் சூரிய ஒளியை மறைப்பதால் நீர் ஆவியாவதில்லை. எனவே இந்தியாவில் பருவகால மழை குறைந்துவிடுகிறது. பருவமழை சுமார் 5-10 சதவீதம் குறைந்துவிட்டது என்று காண்கிறோம். இதனா சென்ற 40 ஆண்டுக் காலத்தில் மகசூல் சுமார் 15 மில்லியன் டன்கள் வரை குறைந்து விட்டது. 15 மில்லியன் டன் உணவு எத்தனை இந்தியர்களுக்கு உணவாகியிருக்கும்!


நேர்காணல்: பிராகாஷ் ராமமூர்த்தி, ரகுநாத் பத்மநாபன்
தமிழ்வடிவம்: :மதுரபாரதி

Read More...

செய்தி: கால நிலை மாற்றங்கள்

கால நிலை மாற்றத்தால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, அடுத்து வரும் தசாப்தங்களில், காலநிலை மாற்றத்தால், பாதிக்கப்படும் என்று உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கால நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வறிய நாடுகளில் உள்ள மக்களே கால நிலை மாற்றத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று, அந்தக் குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சௌரி எச்சரித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும், இந்தக் கால நிலை மாற்றம் பாதிக்கும் என்பதற்கான ஆதாரமான தரவுகளை, முதற் தடவையாக விஞ்ஞானிகள் முன்வைத்திருப்பதாக, இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவிய மற்றுமொரு நிபுணரான, மார்ட்டின் பாரி, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

ஆசியாவின் பெரிய டெல்டா பிரதேசங்கள், சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆபிரிக்க பிராந்தியம், சிறிய தீவுகள் மற்றும் துருவப் பிராந்தியம் ஆகியவற்றையே இந்த மாற்றங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


- பிபிசி-தமிழ்

Read More...

Friday, April 6, 2007

செய்தி: அமெரிக்காவில் சுனாமி வருமா?



தினமணி :: கடலுக்குள் நெருப்பு வளையம்

பசிபிக் கடலடியில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பில் குதிரை லாடம் போன்று வளைந்து நெளிந்து பரவியுள்ள பகுதி 'நெருப்பு வளையம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயர் அழகுக்காக சூட்டப்பட்டதல்ல. உண்மையிலேயே நீறுபூத்த நெருப்பாக, நீருக்குள் அமிழ்ந்திருக்கும் நெருப்புப் பகுதி இது.

கடல் அகழிகள், கண்டத் தட்டுகள் மோதுவதால் உருவான தீவுகள் மற்றும் எரிமலைகள் நிறைந்த பகுதி இது. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவீதமும், மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 81 சதவீதமும் பசிபிக் கடலின் நெருப்பு வளையப் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக உலக நிலநடுக்கங்களில் 5 முதல் 6 சதவீதமும், மிகப் பெரிய நிலநடுக்கங்களில் 17 சதவீதமும் 'அல்பைடு பெல்ட்' பகுதியில் ஏற்படுகின்றன. இது ஜாவா முதல் சுமத்ரா வரை, இமயமலைப் பகுதிகளையும் உள்ளடக்கி மத்தியத் தரைக்கடலில் இருந்து அட்லாண்டிக் கடல் வரை நீண்டுள்ள பகுதி. 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி, இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவுதான். இதற்கு அடுத்தபடி அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதி அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் பகுதி.

புவியின் மேலோட்டில் அமைந்துள்ள கண்டத் தட்டுகள் மோதுவதன் நேரடி விளைவுதான் நெருப்பு வளையம். நாஸ்கா தட்டு, கோகோஸ் தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பசிபிக் தட்டு மற்றும் வட அமெரிக்கத் தட்டுகள் முட்டி மோதிக் கொள்ளும் பகுதி இது.

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நெருப்பைக் கக்கிய, இப்போதும் நெருப்பைக் கக்கும் எரிமலைகள் இங்கு ஏராளம். இந்த நெருப்பு வளையத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது அண்டார்டிகா கண்டம். அங்கும் பெரிய பெரிய எரிமலைகள் உண்டு.

ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், புரூணை, கனடா, கொலம்பியா, சிலி, கோஸ்டா ரிகா, ஈக்வடார், கிழக்கு திமோர், எல் சால்வடார், பிஜி, குவாதமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பப்புவா நியூகினியா, பனாமா, பெரு, பிலிப்பின்ஸ், ரஷியா, சமோவா, டோங்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில்தான் அமைந்துள்ளன. கடந்த திங்கள்கிழமை சுனாமி தாக்கிய சாலமன் தீவுகளும் நெருப்பு வளையத்தில்தான் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட, சர்க்கஸில் நெருப்பு வளையத்தின் வழி தாவிக் குதிக்கும் விலங்குகளின் நிலைதான் இந்த நாடுகளுக்கும்.

Read More...

Thursday, April 5, 2007

வலை: பௌதிகம்

இயற்பியலில் சந்தேகம் என்றவுடன் என்ன செய்வீர்கள்? வீட்டுப்பாடத்திற்கு விடை வேண்டும். அல்லது மகளின் அறிவியல் கேள்விகளுக்கு தெளிவு பிறக்க வேண்டும். கூகிளை நாடலாம்.

எனக்கு Yahoo! Directory பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கான வலையகங்களுக்கு நடுவே, பொருத்தமானதைத் தேர்ந்தெடுப்பதற்குள், கல்லூரிப் படிப்பே காலாவதியாகி இருக்கும்.

இந்த சமயத்தில்தான் StumbleUpon உதவுகிறது.

அப்படி கண்டுபிடித்த தளம்: அதன் மூலமாகHelp - Physics Forums

கருவூலமாகக் கேள்வி-பதில்கள், பரீட்சைக்குத் தயார் செய்பவர்களுக்கு உதவி, கட்டுரை எழுதுபவர்களுக்கு தகவல் பொக்கிஷம், அன்றாட வாழ்வில் சந்திக்கும் அறிவியல் உண்மைகள் என்று சுவாரசியமாகப் படிக்க வைக்கிறது.

Physics Forums

Read More...

மேற்கோள்: காலச்சக்கரம்

இஸ்ரேல் நாட்டுப் பிரதமாகும் வாய்ப்பை வேண்டாம் என்று சொன்னபோது ஐன்ஸ்டீன் இவ்வாறு சொன்னார்: "Politics is for now. Equation is for eternity."

"சமன்பாடுகள்தான் எனக்கு முதன்மையானவை, ஏனென்றால் அரசியல் என்பது நிகழ்காலத்திற்கானது. ஆனால் ஒரு சமன்பாடு என்பதோ என்றைன்றைக்குமான ஒன்று"
என்று ஒரு புத்தகத்தில் இதை மொழிபெயர்த்திருந்தார்கள். அதைப் பார்த்த எழுத்தாளர் அல்லாத என் விஞ்ஞானி நண்பர் ஒருவர் சொன்னார். இந்த மொழிபெயர்ப்பில் மூலத்தின் கவிதையையும் பளிச்சையும் காணோமே என்று.


"அரசியல் இன்றைக்கு. விஞ்ஞானம் சாசுவதமானது" என்கிற தன்னுடைய வார்த்தைக்கு வார்த்தையல்லாத
ஆனால் எளிய மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறதென்றும் கேட்டார்.

ஒழுங்காக மொழியாக்குங்கள் என்கிறார் தமிழ்-லிட்.

Read More...

சினிமா: வியாபாரி

அறிவியல் ரீதியான படங்கள் தமிழில் குறைவு. பத்ரகாளிக்கு பதினாறு கை இருப்பது போல் செல்வர்க்கமித்தல் (க்ளோனிங்) செய்து விட்டால்தான், வீட்டுவேலையில் இருந்து விடுதலை என்று அம்மா அடிக்கடி வருத்தப்படுவாள்.

நியூ போன்ற அறிபுனை திரைப்படங்களைக் கொடுத்த எஸ் ஜே சூர்யாவின் அடுத்த ஆக்கம் 'வியாபாரி'. சூர்யாவால் குடும்பத்தையும் பணியையும் ஒரே சமயத்தில் சமாளிக்க முடியவில்லை. தன் பிரதியை உருவாக்கி உலவ விடுகிறார். தமிழ் சினிமாவும் ஆண் நாயகனைத்தான் நகலாக்கம் செய்து காட்டியிருக்கிறது.

அச்சச்சோ... இது அறிவியல் பதிவு! பெண்ணியம், அரசியல் எதற்கு?

செல்வர்க்கமித்தல் குறித்த சில கட்டுரைகள்:



1. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” - Sea urchin சொல்லும் பாடம் - சுந்தரவடிவேல்: ஒரு உயிரியோட மரபணுவைப் பத்தியும், அது உடம்புல எந்தெந்தப் பாகங்கள்ல எந்தெந்த நேரத்துல, வயசுல வேலை செய்யுது, புரதத்தை உற்பத்தி செய்ய ஏற்பாடு பண்ணுது, உண்டான புரதம் என்ன வேலையைச் செய்யும், அந்தப் புரதம் இல்லன்னா என்ன பிரச்சினை, அதை எப்படிச் சரி செய்யிறது…இதையெல்லாம் கண்டுபிடிக்கனும்னா, நமக்கு மரபணுத் தொடரைத் தெரிஞ்சுக்கறது அவசியம்.

2. தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள் :: திண்ணை: தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து உடலின் 130 வகை வித்தியாசமான திசுக்களாக மாறுகின்றன. அறிவியலாளர்கள். இந்த தண்டு செல்களை பரிசோதனைச்சாலையில் உருவாக்கி அவற்றை ஒரு தனி உறுப்பாக வளரும் படிக்கு ஆணையிட்டாஅல் அவை வளர்ந்து சிறுநீரகமாகவோ, இதயமாகவோ, ஏன் மூளையாகவோ கூட வளரலாம் என்று நம்புகிறார்கள்.

3. குருத்துத் திசுள் - தமிழ் விக்கிபீடியா: உயிரித் தொழில்நுட்பம்

4. என் சிந்தையூடே சிந்திய காப்பியங்கள்: STEM CELLன்னா என்னாங்க: "இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது.

இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்."

5. பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: கருவிலே உருவான அற்புதம்!

கடைசியாக:
6. Vizhippunarvu | Revathi | Medical | Cloning: மரபணு மாற்றுத் (மரண) தொழில்நுட்பம் - உயிர்க்குடுவையை உலுக்கிப் பார்க்கும் ஒரு விபரீத விளையாட்டு :: ரேவதி: "இனி உயிர்கள் பிறக்க அப்பாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம்; எந்த மதக் கடவுளுக்கும் இனி இங்கே வேலை எதுவுமில்லை; டாலியைப்போல அப்பா, அம்மா இல்லாமல் அச்சடித்தாற்போல ஒரேமாதிரி ஆட்டுக்குட்டிகளை சிறு ஆய்வுக் குழாய்களில் ‘படைக்க’ முடியும். மகனும் தேவையில்லை; மகளும் தேவையில்லை - உங்கள் சந்ததி நிலைத்திருக்க. உங்கள் உடலிலிருந்து ஒரே ஒரு செல், வேர்செல் கிடைத்தால் போதும், எத்தனை அடிமைகள் உங்களுக்குத் தேவை - ஆய்வுக்கூடத்திற்கு உடனே ஆர்டர் செய்யலாம்."


Read More...

Monday, April 2, 2007

தவளையின் நாக்கு

தவளையின் நாக்கு அமைப்பு வித்தியாசமானது. மனிதர்களின் நாக்கு வாயின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் தவளையின் நாக்கு வாயின் முன்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.

நாக்கின் பின் நுனி இரட்டைப் பிளவாக இருக்கும்.

புழு, பூச்சிகளைக் கண்டதும் தவளை நாக்கை வெளியே நீட்டும். நாக்கின் நுனியில் உள்ள ஒட்டும் தன்மையுடைய பசைப் பொருளில் பூச்சிகள் ஒட்டிக் கொள்கின்றன.

Read More...