Friday, April 6, 2007

செய்தி: அமெரிக்காவில் சுனாமி வருமா?



தினமணி :: கடலுக்குள் நெருப்பு வளையம்

பசிபிக் கடலடியில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பில் குதிரை லாடம் போன்று வளைந்து நெளிந்து பரவியுள்ள பகுதி 'நெருப்பு வளையம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயர் அழகுக்காக சூட்டப்பட்டதல்ல. உண்மையிலேயே நீறுபூத்த நெருப்பாக, நீருக்குள் அமிழ்ந்திருக்கும் நெருப்புப் பகுதி இது.

கடல் அகழிகள், கண்டத் தட்டுகள் மோதுவதால் உருவான தீவுகள் மற்றும் எரிமலைகள் நிறைந்த பகுதி இது. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவீதமும், மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 81 சதவீதமும் பசிபிக் கடலின் நெருப்பு வளையப் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக உலக நிலநடுக்கங்களில் 5 முதல் 6 சதவீதமும், மிகப் பெரிய நிலநடுக்கங்களில் 17 சதவீதமும் 'அல்பைடு பெல்ட்' பகுதியில் ஏற்படுகின்றன. இது ஜாவா முதல் சுமத்ரா வரை, இமயமலைப் பகுதிகளையும் உள்ளடக்கி மத்தியத் தரைக்கடலில் இருந்து அட்லாண்டிக் கடல் வரை நீண்டுள்ள பகுதி. 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி, இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவுதான். இதற்கு அடுத்தபடி அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதி அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் பகுதி.

புவியின் மேலோட்டில் அமைந்துள்ள கண்டத் தட்டுகள் மோதுவதன் நேரடி விளைவுதான் நெருப்பு வளையம். நாஸ்கா தட்டு, கோகோஸ் தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பசிபிக் தட்டு மற்றும் வட அமெரிக்கத் தட்டுகள் முட்டி மோதிக் கொள்ளும் பகுதி இது.

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நெருப்பைக் கக்கிய, இப்போதும் நெருப்பைக் கக்கும் எரிமலைகள் இங்கு ஏராளம். இந்த நெருப்பு வளையத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது அண்டார்டிகா கண்டம். அங்கும் பெரிய பெரிய எரிமலைகள் உண்டு.

ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், புரூணை, கனடா, கொலம்பியா, சிலி, கோஸ்டா ரிகா, ஈக்வடார், கிழக்கு திமோர், எல் சால்வடார், பிஜி, குவாதமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பப்புவா நியூகினியா, பனாமா, பெரு, பிலிப்பின்ஸ், ரஷியா, சமோவா, டோங்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில்தான் அமைந்துள்ளன. கடந்த திங்கள்கிழமை சுனாமி தாக்கிய சாலமன் தீவுகளும் நெருப்பு வளையத்தில்தான் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட, சர்க்கஸில் நெருப்பு வளையத்தின் வழி தாவிக் குதிக்கும் விலங்குகளின் நிலைதான் இந்த நாடுகளுக்கும்.

0 Comments: